கோவிட் தொற்றுநோய் நிலைமையிலும் ஸ்ரீலங்கன் விமானசேவை சமீபத்தில் 08 புதிய இடங்களுக்கு நேரடி விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் எதிர்காலத்தில் 05 உத்தேச இடங்களுக்கு புதிய விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
06 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் புதிய விமான சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வில் அண்மையில் பிரான்சின் பாரிஸில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். பிரான்சில் உள்ள பல முன்னணி பயண நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஹொங்கொங், கொரியா, கென்யா, ஜேர்மனி, ரஷ்யா, அவுஸ்திரேலியா, நேபாளம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் விமானசேவை அண்மையில் புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் வியட்நாம், இந்தியா, சீனா மற்றும் இஸ்ரேலுக்கு ஐந்து புதிய விமானங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமானசேவையில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சரக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் விமானசேவை புதிய இடங்களை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக பல நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவிட் நிலைமைக்கு தேசிய விமான சேவை பெரும் பங்காற்றியதாகவும், இந்நிலைமை காரணமாக இலங்கைக்கு பாதுகாப்பாக வர முடியாத இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். கோவிட் நிலைமையின்போது சர்வதேச எல்லைகள் மட்டுப்பட்டிருந்த மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்த வேளையில் ஸ்ரீலங்கன் விமானசேவை இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுலாத்துறை தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருவதாகவும், அடுத்த வருடத்தில் அது முழுமையாக மீட்சி பெறுமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் நவம்பர் 02 ஆம் திகதி வரையில் 63,641 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அன்றைய காலகட்டத்தில் இலங்கைக்குப் பயணிக்கும் சிறந்த 10 சுற்றுலா நாடுகளில் பிரான்ஸும் ஒன்றாக இருந்ததாகவும், எதிர்வரும் காலங்களில் அதிகளவான பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சருடன் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதி பேராசிரியர் ஷனிகா ஹிரம்புரேகம, ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே, பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
06 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சிலிருந்து இலங்கைக்கு நிறைந்த பயணிகளுடன் ஸ்ரீலங்கனின் முதல் விமானம் வந்திறங்கியது. பிரான்ஸ் பாரிஸில் உள்ள Charles De Gaulle விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 564 என்ற விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கை வந்தடைந்தனர். அவர்களில் ஏராளமானோர் சுற்றுலாப் பயணிகளாக இருந்தனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவை ஆறு வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை நேற்று (31) ஆரம்பித்தது. UL 564 என்ற விமானம் நேற்று அதிகாலை 01 மணியளவில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு இன்று (01) அதிகாலை 04.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இலங்கை வந்துள்ள பல இலங்கையர்கள் பல வருடங்களின் பின்னர் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர். இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை இச்சேவை மேலும் விரிவுபடுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை 1980 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வாராந்தம் மூன்று விமானங்களை ஞாயிற்றுக்கிழமை (31) முதல் இயக்குகின்றது. எதிர்காலத்தில் பிரான்சில் இருந்து வரும் விமானங்களில் ஆசனங்களின் முன்பதிவுகள் விரைவாக செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்திறங்கும் நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும். அக்டோபர் 01 முதல் அக்டோபர் 24 வரை மட்டும் நாட்டிற்கு வந்திறங்கிய 16,451 சுற்றுலாப் பயணிகளில், 453 பேர் பிரான்சை சேர்ந்தவர்களாவர். ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) முதல் இலங்கைக்கான ஏர் பிரான்ஸ் சேவையும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இச்சேவை மூலம் நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையம் குஷிநகரில் (முன்னைய குஷிநாரா நகர்) திறந்து வைக்கப்பட்டது. குஷிநகர் புதிய சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானம் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யுஎல் 1147 ஆகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளின் பேரில் முதல் விமானம் இந்தியாவிற்கு பயணித்தது.
இன்று அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில், அனுநாயக்க தேரர்களுடன் நூறு பௌத்த பிக்குகள் குஷிநகரை வந்தடைந்தனர். மேலும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையிலான விசேட குழுவும் இதில் பயணமானார்கள். இந்த குழுவில் இராஜாங்க அமைச்சர்களான விஜித பேருகொட, சிசிர ஜயக்கொடி, டி.வி.சானக்க மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகிய பிரமுகர்கள் அடங்கியிருந்தனர். விமான நிலைய திறப்பு விழாவில் விருந்தினர்களை வரவேற்க இந்திய பிரதமர் புதிய குஷிநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். இந்திய பிரதமரின் வேண்டுகோளின் பேரில், குஷிநகரின் பௌத்த பக்தர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வாஸ்கடுவே விகாரையில் வைக்கப்பட்டிருந்த கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள் இந்த விமானம் மூலம் கொண்டுவரப்பட்டிருந்தன.
திறப்பு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் இரண்டு வரலாற்று புகைப்படங்களை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தரின் மூன்றாவது விஜயமான களனி ராஜமஹா விகாரையில் பிரபல இலங்கைக் கலைஞர் சோலியஸ் மெண்டிஸால் வரையப்பட்ட இரண்டு சுவரோவியங்களும் குஷிநகர் விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வென்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இந்த பயணம் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். கட்டுநாயக்க - குஷிநகர் நேரடி விமானம் இரு நாடுகளுக்கும் இடையிலான சமய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் தம்பதிவ செல்லும் இலங்கை பௌத்த யாத்திரீகர்களுக்கு இந்த சேவை மிகவும் வசதியாக அமையுமென்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
புத்தரின் மறைவு இடம்பெற்ற உன்னதமான நந்தவனம் அமையப்பெற்ற குஷிநாரா நகரமே குஷிநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் வட பகுதியில் உள்ள குஷிநகர், புத்தரின் காலத்திற்கு முன்பே குசாவதி என்று அழைக்கப்பட்டது. பெரிய பரிநிர்வாண சூத்திரத்தின்படி, புத்தர் குஷிநாராவுக்கு வருகை தந்து, இறுதியில் அன்னாரின் மறைவின் பின்னர் அப்போதைய தர்மாசோக்க மன்னர் அங்கு ஒரு விசேட தூபியை நிர்மாணித்தார்.
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 06 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை 01 மணியளவில் பிரான்சின் பாரிஸ் நகரின் Charles De Gaulle விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புறப்படுவதுடன், அதே தினம் மாலை பிரான்சில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு வரவுள்ளது.
1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2015 இல் இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உலகின் பல்வேறு இடங்களுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. கொழும்பு மற்றும் பிரான்சின் பாரிஸ் நகருக்கு நேரடி விமான சேவை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிரான்சின் பாரிஸில் உள்ள Charles De Gaulle விமான நிலையத்திற்கு பயணிப்பதற்கு எடுக்கும் நேரம் சுமார் 10 மணித்தியாலங்களாகும். முதல் விமானப் பயணத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சாணக்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள செரண்டிப் மண்டபத்தில் எளிமையான வைபவமொன்று இடம்பெற்றது. எதிர்காலத்தில் பல புதிய இடங்களுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு தேசிய விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவை அவசியமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், ஸ்ரீலங்கன் விமான சேவையை நாட்டின் தேசிய விமான சேவையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் சுற்றுலாப் பொதிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கான விசேட நிவாரணப் பொதிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு இரண்டு வருட காலத்திற்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மேலும், தரையிறக்கம் மற்றும் தரிப்பிட கட்டணங்களுக்கு ஒரு வருட சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மத்தள சர்வதேச விமான நிலையத்தை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வதுடன், விமான நிலையத்துடன் தொடர்புடைய ஹோட்டல் விடுதி வசதிகளை மேம்படுத்துவதிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்தள விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. முழுமையாக பொருத்தப்பட்ட சரக்கு சோதனை நிலையத்தை நிறுவும் பொருட்டு தற்போதுள்ள பராமரிப்பு கட்டிடத்தை நவீனப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானங்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் திருத்தல் வேலைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் சிறிய பரிமாணத்திலான பராமரிப்பையும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பராமரிப்பு மற்றும் இயந்திரப் பழுதுபார்க்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. அதற்கான உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை நிறைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்தள ராஜபக்ச விமான நிலையத்தில் சரக்கு விமான நடவடிக்கைகள் விரிவாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, எதிர்காலத்தில் வாரத்திற்கு 06 சரக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சரக்குகளை கையாளும் சேவையை ஸ்ரீலங்கன் விமான சேவை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. 03 பாரிய விமானங்கள் உட்பட சுமார் 07 விமானங்கள் சரக்கு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்தள ராஜபக்ச விமான நிலையத்தை அடுத்த வருடத்திற்குள் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Sri Lanka Embassy in Brussels and ‘Karunakarala Ayurveda Resort’ in Waikkal Sri Lanka, in collaboration with the Union Luxembourgeoise de Tourisme (ULT) in Luxembourg, organized ‘Sri Lanka Ayurveda Evening’ on 2nd July 2025 at Goeres Hotel in Luxembo
Continue Reading