இரத்மலான விமான நிலையம் 05 தசாப்தங்களுக்குப் பிறகு பிராந்திய மற்றும் சர்வதேச விமான சேவைகளைத் ஆரம்பிக்கவுள்ளது. முதலில் அட்டவணைப்படுத்தப்பட்ட விமானம், இரத்மலான விமான நிலையத்திலிருந்து அடுத்த மாத நடுப்பகுதியில் மாலைத்தீவுக்கு புறப்பட உள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம் இது செயல்படுத்தப்படவுள்ளது.
இரத்மலான சர்வதேச விமான நிலையம் 1938 இல் நிர்மாணிக்கப்பட்டதன் பின், 1968 முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயங்கியதால் பிராந்திய சர்வதேச விமானங்கள் இங்கு செயல்படவில்லை. இரத்மலானை விமான நிலையத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி, புதிய பிராந்திய சர்வதேச விமானங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை ஒரு பிராந்திய விமானங்களின் கேந்திரமையமாக அபிவிருத்தி செய்யப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இரத்மலான விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைத்தீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்படும். மாலைத்தீவு விமானசேவையுடனான நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் இரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர். 50 பேர் பயணிக்கும் விமானம் கொழும்பு மற்றும் மாலைத்தீவு இடையே முதலில் பறக்கத் தொடங்கும். இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களை ஊக்குவிப்பதற்காக, ஒரு வருடத்திற்கான விமான நிறுத்தம் மற்றும் தரிப்பிட கட்டணங்களை நீக்கவும், பயணிகளிடமிருந்து விதிக்கப்படும் விமான நிலைய சேவை வரியை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்கவும் அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இரத்மலான சர்வதேச விமான நிலையத்தை 05 துறைகளில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை உள்ளூர் விமான சேவை நிலையம், பொழுதுபோக்குக்கான விமானங்களின் மத்திய நிலையம் மற்றும் விமானப் பயிற்சி நிலையம் என கேந்திரப்படுத்தி அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உயர் வருமானம் பெறும் நபர்களை இலக்கு வைத்து, இலங்கைக்கான தனியார் விமானங்களின் சேவைகளை ஊக்குவித்தல், தனியார் விமானங்களுக்கான தொழில்நுட்ப தரிப்பிட சேவை மற்றும் எரிபொருளை நிரப்புவதற்கான சேவைகளை வழங்கல் என்பனவற்றை விரிவுபடுத்தவும் இதன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.