- மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய செயற்பாடுகள்.
- சுற்றுலாப் பொதிகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள்.
- சரக்கு விமான நடவடிக்கைககளும் விரிவுபடுத்தப்படவுள்ளன.
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் சுற்றுலாப் பொதிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கான விசேட நிவாரணப் பொதிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு இரண்டு வருட காலத்திற்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மேலும், தரையிறக்கம் மற்றும் தரிப்பிட கட்டணங்களுக்கு ஒரு வருட சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மத்தள சர்வதேச விமான நிலையத்தை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வதுடன், விமான நிலையத்துடன் தொடர்புடைய ஹோட்டல் விடுதி வசதிகளை மேம்படுத்துவதிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்தள விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. முழுமையாக பொருத்தப்பட்ட சரக்கு சோதனை நிலையத்தை நிறுவும் பொருட்டு தற்போதுள்ள பராமரிப்பு கட்டிடத்தை நவீனப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானங்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் திருத்தல் வேலைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் சிறிய பரிமாணத்திலான பராமரிப்பையும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பராமரிப்பு மற்றும் இயந்திரப் பழுதுபார்க்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. அதற்கான உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை நிறைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்தள ராஜபக்ச விமான நிலையத்தில் சரக்கு விமான நடவடிக்கைகள் விரிவாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, எதிர்காலத்தில் வாரத்திற்கு 06 சரக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சரக்குகளை கையாளும் சேவையை ஸ்ரீலங்கன் விமான சேவை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. 03 பாரிய விமானங்கள் உட்பட சுமார் 07 விமானங்கள் சரக்கு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்தள ராஜபக்ச விமான நிலையத்தை அடுத்த வருடத்திற்குள் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.